மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நாற்று நடும் போராட்டம்
திருநெல்வேலி மாநகரின் முக்கிய பல சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது, இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.;
நெல்லை மாநகராட்சி தொகுதிக்கு உட்பட்டது நெல்லை சந்திப்பு அடுத்த சேந்தி மங்கலம் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள 4-வது வார்டு பகுதி சாலை முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் பராமரிக்கப்படாத அந்த சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அந்த பகுதி மக்கள் பல முறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்துகளும் முற்றிலுமாக அங்கு தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கரடுமுரடான சேரும் சகதியும் கலந்த சாலையை கடந்து நெல்லை சந்திப்புக்கு அவசர தேவைக்கு வந்து செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதை அறிந்த நாலாவது வட்டத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேறும் சகதியுமாக கிடந்த சேந்திமங்கலம் மெயின் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து அந்த பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.