பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
நெல்லை காந்திநகர் ராணிஅண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.;
நெல்லை காந்திநகர் ராணிஅண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கி பல்கலைக்கழக கையேட்டை வெளியிட்டு தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல இயக்குனர் வினோத் கண்ணா வரவேற்புரையாற்றினார்.
முகாமில் பல்கலைக்கழக தகவலியல் இயக்குனர் ஏ.எஸ்.அருள் லாரன்ஸ் கலந்து கொண்டு வழிகாட்டுதல் பயிற்சி அளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தில் தேர்வு மையங்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அந்த கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு பேராசிரியர்களுக்கு தற்போது புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வழிகாட்டுதல்படி 2030-ம் ஆண்டு தமிழகம் உயர் கல்வியில் 50 சதவீதம் மாணவர்களை எட்டுவதற்கு திட்டமிட்டு இருந்தது. ஆனால் தமிழகம் 2020-ம் ஆண்டிலேயே 49.3 சதவீதத்தை எட்டி விட்டது. எனவே வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70 சதவீத உயர்கல்வி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றார்.
பேராசிரியர் குமார் ஆலோசனைகள் வழங்கி பேசினார். பயிற்சி முகாமில் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.