மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான கால அவகாசம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், 10.05.21 முதல் 24.05.21 வரையிலான காலத்தில் மின் கணக்கீடு செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மே 2019ஆம் ஆண்டில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டு தொகையாக கருதி செலுத்த வேண்டும்.
புதிய நுகர்வோர்கள் மே 2021க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியலின்படி, அதாவது மார்ச் 2021-இன் கணக்கீட்டின் படி, மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்த வேண்டிய கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.