அச்சுறுத்தும் புதிய மோசடி: ஓடிபி எல்லாம் வேண்டாம், மிஸ்டு காலில் 'ஆட்டய' போடுறாங்க
ஓ.டி.பி., எதுவும் இல்லாமல் மொபைல் போனில் பிளாங்க் அழைப்பு மட்டும் கொடுத்து பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் புதிய மோசடிகள் அதிகரித்து வருகிறது.;
முன்பெல்லாம் வங்கிகளில் தரப்படும் ஓடிடி எண்களை ஏமாற்றி கேட்டு தான் பணத்தை மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது மிஸ்டு கால் கொடுத்து தொழிலதிபர் ஒருவரின் 50 லட்ச ரூபாயை மோசடி செய்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு இரவு 7 மணியிலிருந்து 9 மணிவரை பலமுறை மிஸ்டு கால் அழைப்பு வந்துள்ளது. அவர் செல் போனை எடுத்து பேசாத நிலையில் திடீரென அவரது வங்கி கணக்கில் இருந்து 50 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாங்க் கால் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரது மொபைல் போனுக்கு தொடர்ந்து கால் செய்து, அவர் அழைப்பை எடுத்த பிறகும், மற்றொரு பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்படியே தொடர்ந்து பிளாங்க் கால் கொடுத்து 50 லட்சம் வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், அவரிடம் எந்த ஓடிபியும் பெறவில்லை.
சம்பந்தப்பட்ட அந்த தொழிலதிபர் நடப்பு வங்கி கணக்கு வைத்திருப்பதாகவும் அதில் பெரிய நிபந்தனைகள் எதுவும் இல்லாததால் எந்தவித தடையும் இல்லாமல் மோசடி நடந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை மையமாக வைத்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பெறுநர்கள் கணக்கு வைத்திருப்பவர்களாக இருக்கலாம், அவர்கள் தங்கள் கணக்குகளை வாடகைக்கு மோசடி செய்பவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன
முதற்கட்ட விசாரணையில், சிம் ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை மோசடி செய்திருக்கலாம் என்றும், இரண்டு முறை நிரூபிக்கும் அல்லது இரண்டு முறை உறுதிப்படுத்தும் வங்கிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்புகளில் இருக்கும் சில தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், ஒரு நபருக்கு அழைப்பு விடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தியை கையாண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுபோல இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டு தொழிலதிபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை மோசடி செய்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பல்வேறு மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், இப்போது புதியதாக உருவாகி உள்ள மோசடி அத்தனை பேரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சைபர் குற்றங்களை தவிர்க்க அரசு என்ன தான் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தாலும், மோசடியாளர்கள் புதியதாக வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைத்தது, ஆதார், பான் கார்டு தகவல்களை இணைத்தது மோசடியாளர்களுக்கு மிகுந்த வசதியாக போய் விட்டது. வங்கிகள் துரிதமாக செயல்பட்டு இது போன்ற மோசடிகளை தடுக்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் மொபைல் எண்களையாவது வங்கி கணக்கில் இருந்து நீக்கி விட வேண்டும். இதுவே வங்கியில் பணம் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்கும்.
டிஜிட்டல் பணபரிவத்தனைகளுக்கு பல புதிய பாதுகாப்பான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என முதலீட்டார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'அலைபேசி தகவல்கள் மூலம் பண மோசடி அதிகரித்து வரும் நிலையில், புதிய மோசடிகள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை மிகவும் நுட்பமானவர்களால் கூட கண்டறிய முடியாது என்ற நிலையில். சாதாரண பொதுமக்கள் இதில் இருந்து எப்படி தப்ப முடியும்?. எனவே வங்கிகள் தான் தங்களது வாடிக்கையாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பான ஒரு நடைமுறையினை உருவாக்கி கொடுக்க வேண்டும். தனது வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்து விடாமல் பாதுகாக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு உண்டு. என்றனர்.