தூத்துக்குடி பாலியல் வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

தூத்துக்குடியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-10-31 14:41 GMT

10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முகமது நசீர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த முகமது தாரிக் என்ற முகமது நசீர் (24) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 10.03.2020 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம்சாட்டப்பட்ட முகமது தாரிக் என்ற முகமது நசீர் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 7,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார். இதையெடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட முகமது நசீர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் . வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டு தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News