தூத்துக்குடியில் இணையம் மூலம் ரூ. 46 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது
தூத்துக்குடியில் இணையம் மூலம் ரூ. 46 லட்சம் மோசடி செய்த வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்த தங்கதுரை (52) என்பவர் டெலிகிராம் ஆப் ஐ பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா என்ற விளம்பரம் Aashna (@Aashna_2mi) என்ற ID-யில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து அந்த விளம்பரத்தை பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசிய போது அவர்கள் FROSCH Travel Management Company நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதை மேம்படுத்துவதற்காக அதன் சம்பந்தப்பட்ட வலைதளத்தில் Star Ratings கொடுப்பதன் மூலம் கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து முதலில் 1100, 1500 லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்து பின்பு அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை (Task) செய்யும் படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தங்கதுரை, அவர்கள் கூறிய வளைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு(Task) பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054/- பணத்தை தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடந்த 23.05.2023 அன்று தங்கதுரையை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டம் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான எலியாஸ் பிரேம் குமார் கொடுத்த வாக்குமூலத்தில் மற்றொரு எதிரியின் வாட்ஸ்அப் எண்ணை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த எண்ணை வைத்து தொழில்நுட்ப ரீதியில் விசாரணை மேற்கொண்டதில் சத்தீஸ்கர் மாநிலம், கார்பா மாவட்டம் அம்ரையபாரா பகுதியைச் சேர்ந்த சத்தியம் விஷ்வகர்மா (22) என்பவர் என தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை போலீசார் சத்தீஸ்கர் மாநிலம் சென்று சத்தியம் விஷ்வகர்மா (22) என்பவரை கடந்த 18.06.2023 அன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்து சத்தீஸ்கர் மாநிலம் கார்பா முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவு பெற்று பின்னர் தூத்துக்குடி அழைத்து வந்தனர்.
விசாரணைக்குப் பிறகு தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சத்தியம் விஷ்வகர்மாவை ஆஜர்படுத்திய போலீசார் அவரை தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 16 செல்போன்கள், 8 ஏடிஎம் கார்டுகள், 79 சிம்கார்டுகள், 22 வங்கி செக் புக், ஒரு இன்டர்நெட் மோடம், 4 பென்டிரைவ் மற்றும் 16 போலி ரப்பர் முத்திரைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.