தூத்துக்குடியில் உலக மீன்வளத் தின விழா: மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

உலக மீன்வளத் தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Update: 2023-11-21 15:13 GMT

உலக மீன்வளத் தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

உலக மீன்வள தினமானது 1997 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களுக்கான பேரவையின் 18 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டமானது புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நடைபெற்றபோது மீன்களின் வாழிட அழிவு, பொறுப்பற்ற வரம்புமீறிய மீன்பிடித்தல், கடல் மற்றும் உள்நாட்டுமீன் இருப்புகளின் நிலைத்தன்மைக்கு ஏற்படும் பிற தீவிர அச்சுறுத்தல்கள் குறித்து கவனத்தை ஈர்க்கும் பொருட்டு உலக மீன்வளதினம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் வளர்ப்பு துறை மூலமாக “உலக மீன் வள தினம்” சிறப்பாக கொண்டாடும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிர்ப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மீன் வளர்ப்பு துறை தலைவர் ஆதித்தன் கலந்து கொண்டு உலக மீன் வள தினத்தை கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், வளங்குன்றா மீன் வள மேலாண்மை முறைகள் பின்பற்றப்படாததால் நன்னீர் மற்றும் கடல்சார் வளங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன என்றும் பேசினார்.

தொடர்ந்து, மீனவ சமுதாயம் மற்றும் இளைஞர்களிடையே மீன் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு இருத்தல் வேண்டும் என வலியுறுத்தி உலக மீன்வள தினத்திற்கான உறுதி மொழியை பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

இதற்கிடையே, மீன்வளக் கல்லூரியில் இந்திய கடல் மீன் வளத்தின் நீடித்தவளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் அகிலன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் கல்லூரி முன்னாள் முதல்வர் வெங்கடரமணி, மீன்வள விஞ்ஞானி ஸ்ரீஹரி, மீன்வளத் துறை உதவி இயக்குநர் விஜயராகவன், நாகை கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குநர் அறிவுக்கரசு, வேளாண் அறிவியல் விஞ்ஞானி தயாள் தேவதாஸ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

Tags:    

Similar News