தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை: காவல்துறையினர் குவிப்பு

தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-12-11 14:25 GMT

கொலை செய்யப்பட்ட தொழிலாளி ஜெகன் ராஜ்.

தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு அருகே உள்ள லேபர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ். கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நவநீதன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஜெகன் ராஜ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றுள்ளார் அப்போது லேபர் காலனி அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த சிலர் ஜெகன் ராஜை முட்புதருக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஜெகன் ராஜின் தலையில் அரிவாளால் வெட்டியும், வயிற்றில் கத்தியால் குத்தியும் விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனராம்.

உடலில் அரிவாள் வெட்டு மற்றும் கத்திக் குத்து பட்டதால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜெகன் ராஜை அருகே இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே கூலித் தொழிலாளி ஜெகன்ராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தெர்மல் நகர் காவல் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஜெகன் ராஜூக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நவநீதன் மற்றும் செல்வன் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்ததாகவும், அந்த பிரச்னையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஜெகன் ராஜை கொலை செய்து இருப்பதாவும்  விசாரணையில் தெரியவந்தது.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலி தொழிலாளி ஜெகன் ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் மட்டும் தூத்தூக்குடி மாநகரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நடைபெறும் இரண்டாவது கொலை இது ஆகும்.

Tags:    

Similar News