‘மகளிர் உரிமை தொகை நியாயமானவர்களுக்கு கிடைக்கும்’- கனிமொழி எம்.பி.
மகளிர் உரிமைத் தொகை நியாயமாக யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்கும் என கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து, ஒரு பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஒரு பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, ஒரு பயனாளிக்கு ரூ. 2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 2,243 என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேதியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தருவோம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்தோம். அதை நிறைவேற்றி காட்டி, இன்று ஒரு கோடிக்கு மேலே பெண்கள் பயன்படக்கூடிய வகையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கிக் கொண்டு இருக்கும் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
சில பெண்களுக்கு இன்னும் அந்த உரிமை தொகை வரவில்லை என்று ஒரு கோரிக்கை இருக்கிறது, நிச்சயமாக யாருக்கெல்லாம், நியாயமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
அதில் உள்ள சில பிரச்னைகளை விரைவில் சரி செய்து எல்லா சகோதரிகளுக்கும் யார் யாருக்கு எல்லாம் உரிமை தொகை கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் நிச்சயமாகச் செய்து தருவோம் என்ற உறுதி நாங்கள் இங்கு அளிக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சரும் தமிழ்நாடு அரசும் செய்துகொண்டு இருக்கிறது, எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி வரும். நாம வரி காட்டுகிறோம் ஒன்றிய அரசாங்கத்திற்கு, ஆனால் நமக்கு வரவேண்டிய சரியாக வரவில்லை என்றாலும், எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி மக்களுக்கான திட்டங்களைச் செய்து கொண்டு இருக்கின்ற ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசுவாமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.