தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
தூத்துக்குடி அருகே காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.;
தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அருகே உள்ள அ. கைலாசபுரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடியிருக்குகள் உள்ளன. இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் மூலம் மூன்று குடிநீர் குழாய்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, தாமிரபரணி ஆற்றில் இருந்து இந்த கிராமம் வழியாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லக்கூடிய டேங்க்கில் இருந்து தண்ணீர் தேவையை மக்கள் பூர்த்தி செய்துள்ளனர்.
ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், அந்த டேங்கில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமமடைந்த அ. கைலாசபுரம் கிராம மக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று பிடிக்க வேண்டியுள்ளது.
அதுவும் உப்பு தண்ணீர் தான் பிடிக்கும் நிலை உள்ளதாக கூறும் மக்கள், இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரை அணுகி குடிநீர் தேவை குறித்து முறையிட்டுள்ளனர். மேலும், குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் இந்தப் பகுதி பெண்கள் குடிநீருக்காக ஆங்காங்கே தேடி அலையும் சூழ்நிலையை எடுத்து கூறியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், கால்நடைகளான, ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் தட்டுப்பாடாக உள்ளதாகவும், தங்கள் பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் 15 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், குடிநீர் வழங்க வலியுறுத்தி அ. கைலாசபுரம் பகுதி மக்கள் கிராம மக்கள் கிராம சாலையில் காலி குடங்களுடன் இன்று அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மறியல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.