தூத்துக்குடி கிறிஸ்தவ தேவேலாயத்தில் பெண்கள் திடீர் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள எபநேசர் ஆலய குருவானவரை மாற்றக்கோரி எபநேசர் ஆலயத்தின் உள்ளே சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-09-28 05:57 GMT

தூத்துக்குடி எபநேசர் ஆலயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோர்.

தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் உள்ளன. திருமண்டலத்தில் நிர்வாகத்தை கவனிப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்னை நிலவுவது வழக்கம்.

இந்த நிலையில், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் தூத்துக்குடி வட்டக்கோவில் பகுதியில் எபநேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் குருவானவராக ஜெபக்குமார் ஜாலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த ஆலயத்தின் குருவமானவராக ஜெபக்குமார் ஜாலி பதவி ஏற்றது முதல் திருச்சபை நிர்வாகிகள் மற்றும் சபை மக்களுக்கு எதிராகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே, அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என ஏற்கெனவே இந்த ஆலயத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர் அதைத் தொடர்ந்து காவல்துறை மூலம் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு குருவானவர் தரப்பு ஒத்துக் கொள்ளாமல் தற்போது சபை மக்கள் திருமண நிகழ்வு மற்றும் இறப்பு நிகழ்வு மற்றும் ஜெப கூட்ட நிகழ்வு ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்காமல் குருவானவர் ஜெபக்குமார் ஜாலி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, சபை மக்களுக்கு எதிராக செயல்படும் குருவானவர் ஜெபக்குமார் ஜாலியை உடனடியாக எபநேசர் ஆலயத்தில் இருந்து மாற்ற தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எபநேசர் ஆலயத்தின் உள்ளே சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவிரதப் போராடட்த்தில் ஈடுபட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News