விமானம் கடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தூத்துக்குடியில் சிறப்பு ஒத்திகை
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி மற்றும் சிறப்பு ஒத்திகை நடைபெற்றது.;
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி மற்றும் சிறப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் உள்ளூர் விமான நிலையங்களில் அடிக்கடி சிறப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுவது உண்டு. தீவிரவாதிகளால் விமானம் கடத்தப்பட்டாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து இந்த ஒத்திகையில் விளக்கம் அளிக்கப்படும்.
அதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களைக் கடத்தலை தடுக்கவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் நோக்கத்துடன், தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி இன்று நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், தூத்துக்குடி டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மத்திய புலனாய்வுப் பணியக அதிகாரி ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விமானங்களைக் கடத்தலை தடுக்கவும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், பயணிகளுடன் விமானம் கட்டத்தப்பட்டால் பயணிகளை பாதுகாப்பாக மீட்பது, கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது பயிற்சி ஒத்திகையின் போது தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், கடலோர பாதுகாப்பு குழும கமாண்டோக்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியன் கோஸ்ட் கார்டு மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், தூத்துக்குடி விமான நிலையத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.