தூத்துக்குடியில் களைகட்டிய தசரா திருவிழா: வேடமணிந்த பக்தர்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடியில் தசரா திருவிழா களைகட்டிய நிலையில், பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பக்தர்கள் மாநகரம் முழுவதும் தசரா கொண்டாடி வருகின்றனர்.;
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து 40 நாட்கள் மற்றும் 10 நாட்கள் என விரதம் இருந்து தாங்கள் வேண்டும் காரியம் நிறைவேற அம்மனை வேண்டி தங்களுக்கு பிடித்த வேடம் அணிந்து காணிக்கை வசூலிப்பது உண்டு.
அவ்வாறு வசூலிக்கும் காணிக்கை தொகையை தசரா திருவிழாவின் இறுதி நாளில் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று வேண்டுதல் நிறைவேற வேண்டி முத்தாரம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி பின்னர் மாலை விரதத்தை முடித்துகொள்வது வழக்கம். இதைபோல் மாலை அணிவிக்கும் பக்தர்கள் தனித்தனி குழுக்களாக அமைத்து விதவிதமான வேடங்கள் அணிந்து ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று ஆடி அருள்வாக்கு கூறி காணிக்கைகள் வசூலிப்பதும் உண்டு.
அவ்வாறு வசூலிக்கப்படும் காணிக்கை தொகையை தசரா திருவிழாவின் இறுதிநாளில் முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றக்கோரி வேண்டி அம்மன் உண்டியலில் செலுத்தி பின்னர் மாலை கழற்றி விரதத்தை முடித்துகொள்வது வழக்கம். இந்நிலையில் தசரா பண்டிகை முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தசரா செட்டுகள் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்து தசரா திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதில் புகழ்பெற்ற தசரா செட்டான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சிவல்விளை புதூர் ஈஸ்வரி தசரா குழுவினர் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்தனர். அந்த குழுவில் வந்த அம்மன் வேடம் உட்பட அனைத்து சாமி வேடங்கள் மற்றும் விதவிதமான ஏராளமான சிவன், பார்வதி, கிருஷ்ணர், அனுமன், பிள்ளையார் என ஏராளமான பக்தர்கள் அணிந்து வந்த வேடங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், தசரா செட்டுடன் வந்த நடன கலைஞர்களின் விதவிதமான நடனங்கள் அனைவரையும் துள்ளல் போட வைத்தது.