தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடைகள் வாங்க கடன் வழங்காமல் புறக்கணிப்பதாக கூறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 11 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வரதம்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தின் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் என்பவர் இருந்து வருகிறார்.
இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட கிராமங்களான பீக்கிலிபட்டி, மீனாட்சிபுரம், கட்ராம்பட்டி, வெங்கடாசலபுரம், ஐயாகோட்டை, உருளைகுடி உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆடு மாடு கோழி வாங்குவதற்காக கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஆனால், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பீக்கிலிப்பட்டி முருகேசன் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு மட்டும் கடனை வழங்கிவிட்டு நூற்றுக்கணக்கானோருக்கு கடன் வழங்காமல் புறக்கணித்து வருவதாகவும் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரதம்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தங்களுக்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க கடன் சங்கம் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.