தூத்துக்குடியில் நிலத்தடி நீர் திருடிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
தூத்துக்குடி அருகே சீல் வைத்த போர்வெல்லில் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் திருடிதாக நான்கு லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தைச் சுற்றி தனி நபர்கள் 30-க்கும் மேற்பட்ட போர்வெல்லை அமைத்து நிலத்தடி நீரை முறைகேடாக திருடி விற்பனை செய்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும் நீதிமன்ற நடவடிக்கை காரணமாகவும் மதுரை உயர்நீதிமன்றம் முறைகேடாக செயல்படும் போர்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டாலங்குளம் பகுதியில் முறைகேடாக செயல்பட்ட 17 போர்வெலுக்கு சீல் வைத்தனர்.
ஆனால் ஒரு மாதத்திற்கு பின்பு அரசு வைத்த சீல்களை போர்வெல் உரிமையாளர்கள் திருட்டுத்தனமாக எடுத்து மீண்டும் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கட்டாலங்குளம் பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், கட்டாலங்குளம் பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கட்டாலங்குளம் பகுதியில் இன்று முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சும் போர்வெல்களில் இருந்தும் தண்ணீரை எடுத்து விற்பனை செய்யும் நான்கு லாரிகளை சிறை பிடித்தும், முறைகேடாக செயல்படும் போர்வெல்களுக்கு சீல் வைக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சாயர்புரம் காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்தடி நீரை விற்பனை செய்த நான்கு லாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர். மேலும் முறைகேடாக செயல்படும் போர்வெல்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்ததால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கட்டாலங்குளம் பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்க முறைகேடாக செயல்படும் போர்வெல்களுக்கு மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.