குடிநீர் வசதி கேட்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

வைப்பாறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.;

Update: 2023-12-04 14:20 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வைப்பாறு பகுதி மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலையில், வைப்பாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள வைப்பாறு கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான தண்ணீர் தேவையானது, வேடப்பட்டி - வைப்பார் கிராமத்தின் நடுவே, சுப்பிரமணியபுரம் என்னும் ஊரில், வைப்பாறு ஆற்று பகுதியில், வைப்பார் உள்பட அதனை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களின் பஞ்சாயத்து சார்பாக போர்வெல் அமைத்து, ஒவ்வொரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களுக்கும் பைலைன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

மேலும், வைப்பாறு கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணை பக்கத்திலும், கிராம மக்கள் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்து, ஊர் சார்பாக போர்வெல் அமைத்து, தொட்டி கட்டி, தண்ணீரை சேமித்தும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது வைப்பாறு கிராமத்தினை சுற்றி உள்ள உப்பளங்களில் உள்ள கழிவு நீரை, ஆற்று பகுதிகளிலும், அருகில் உள்ள கடல் பகுதிகளிலும் அனுமதியின்றி கலப்பதால், கடலும், ஆறும் இணையக்கூடிய முகத்துவாரத்தில் உள்ள வைப்பாறு தடுப்பணையானது உப்பு நீரால் அரிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய போர்வெல் தண்ணீரும் கடுமையான உப்பு நீராக மாறுகிறது. இதனால், அந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

உப்பளங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், வேடப்பட்டி - வைப்பாறு கிராமத்தின் நடுவே, சுப்பிரமணியபுரம் ஊரில், வைப்பாறு ஆற்று பகுதியில், அமைக்கப்பட்டுள்ள போர்வெல் கிணறு மற்றும் பைன் லைன் தண்ணீரும் கடுமையான உப்பு தன்மையை அடைந்து பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வைப்பாறு கிராம மக்களுக்கான குடிநீர் தேவையானது, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து பெறப்பட்டு வருகிறது. இந்த குடிநீரும் 15 நாட்களுக்கு ஒரு முறை, 3 மணி நேரம் மட்டுமே வருகிறது. ஒரு வீட்டுக்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. மேலும், குடிநீர் தேவைக்கு ஒரு குடம் தண்ணீரை 20 ரூபாய் கொடுத்து கடைகளில் வாங்க வேண்டிய சூழல் தான் உள்ளது.


தண்ணீருக்காக இவ்வளவு நெருக்கடியான சூழலை பொறுத்து பார்த்து கடந்து சென்ற பொதுமக்கள், இன்று 10 க்கும் மேற்பட்ட வேன்களில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் என கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் பெரும் திரளாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்நிலைய ஆய்வாளர் சண்முகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் பட்ட கிராமக்கள், கிராமத்தின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் ஒருசிலர் மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்பட்டு, ஆட்சியரை சந்தித்து மனு அளித்து சென்றனர்.

Tags:    

Similar News