தூத்துக்குடியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சி
தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ‘வீட்டுக்கொரு விஞ்ஞானி ” என்ற அறிவியல் கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.;
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளியில் எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் முயற்சியாக ‘வீட்டுக்கொரு விஞ்ஞானி “ என்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும், மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:
மனிதன் தோன்றிய காலத்தில் அவனுடைய சிறிய சிறிய கண்டுபிடிப்புகளே தற்போதைய கண்டுபிடிப்புகளின் முன்னோடி ஆகும். மாணவர்கள் கல்வியோடு தங்களது திறமைகளையும் கண்டுபிடித்து வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களது திறமைதான் உங்களை வருங்காலங்களில் சாதனையாளர்களாக மாற்றும்.
இந்த வயதில் தோல்விகளை கண்டு துவண்டுவிடக்கூடாது. அந்த தோல்வியை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் நாமும் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றியாளர்கள்தான். எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேற வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாணவ மாணவிகளிடம் அறிவியல் குறித்து கலந்துரையாடி கேட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளித்த ஒரு மாணவன் மற்றும் மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.
இந்தக் கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 67 பள்ளிகளில் இருந்து 600 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 300 அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகர் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஜெயராமன், பள்ளி முதல்வர் தீபாஸ்ரீ ஷர்மா, பள்ளி தாளாளர் ப்ரியதர்ஷினி, பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ்பிரசன்னா உட்பட பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் உட்பட காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.