தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடற்கரை பகுதியில் கறுப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-28 15:04 GMT

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி முர்முக்கு அழைப்புவிடுக்கவில்லை எனக் கூறி எதிர்கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சவார்க்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திறக்கப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கறுப்பு சட்டை அணிந்தும், கறுப்பு கொடியேற்றியும் போராட்டம் நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியில் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கொடியேந்தியும், கறுப்பு சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். 


சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்தும், மதச்சார்பற்றான நாடான இந்தியாவில் பாராளுமன்றத்தில் மத அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் செங்கோல் நிறுவப்பட்டதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கடற்கரை பகுதியிலிருந்து படகில் நடுக்கடலுக்கு சென்று கறுப்பு கொடி ஏந்தியபடி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல்வேறு இடங்களில் கறுப்பு சட்டை அணிந்தும், கறுப்பு கொடியேற்றியும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடியில் அந்தக் கட்சியினர் கடற்கரை பகுதியிலும், கடலுக்குள் படகில் சென்றும் நடத்திய போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News