தூத்துக்குடி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ. வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-04-25 12:23 GMT

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர், இன்று வழக்கம்போல தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது, அலுவலகத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத இருவர் லூர்து பிரான்சிஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

வெட்டுப்பட்ட லூர்து பிரான்சிஸின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் லூர்து பிரான்சிஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து, அரிவாளால் வெட்டப்பட்ட லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

இருப்பினும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தாமிரபரணி ஆற்றில் சிலர் தொடர்ந்து மணல் திருடி வந்ததாகவும், அதை தடுக்கும் வகையில் முறப்பநாடு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸ் புகார் அளித்ததால் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக முறப்பநாடு போலீஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆறுதல் கூறினார்.

ஆட்சியர் ஆறுதல்

இந்த நிலையில், கொலையுண்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கொலையுண்ட லூர்து பிரான்சிஸுக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இதற்கு முன்பு ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியபோது அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு நிலம் தேவைப்பட்டபோது அந்தப் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அருங்காட்சியகத்திற்கு நிலம் ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்தார். அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை தாக்குவதற்கு முயன்றனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட மிகவும் தைரியமான, நேர்மையான கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஒன்றரை வருடங்களாக முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இன்று மதியம் 12.30 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். தலை, கைகளில் நிறைய வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை காப்பாற்ற முடியவில்லை.

மிகவும் நேர்மையான அதிகாரி. அரசு சொத்துக்கு பங்கம் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர் லூர்து பிரான்சிஸ். அவரை வெட்டிய 2 பேரையும் உடனடியாக கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தி உள்ளேன். வெட்டியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News