வி.ஏ.ஓ. கொலை வழக்கு: விசாரணையை தொடங்கினார் சிறப்பு காவல் அதிகாரி
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட வழக்கின் சிறப்பு அதிகாரி தனது விசாரணையை தொடங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த லூர்து பிரான்சிஸ் கடந்த 25 ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது இருவரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீஸார் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைதான இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் செய்து இருந்ததாகவும், ஆனால், போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், மணல் கடத்தல் புகார் தொடர்பாக முறப்பநாடு காவல்துறையினர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்ததால், வி.ஏ.ஓ. கொலை வழக்கை அவர்கள் விசாரித்தால் சரியாக இருக்காது என பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், அந்த வழக்கை மற்றொரு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷை நியமனம் செய்து தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிறப்பு அதிகாரியான தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் முறப்பநாடு காவல்நிலையத்திற்கு நேற்று இரவு நேரில் சென்றார். கிராம நிர்வாக அலுவலர் கொலை தொடர்பான கோப்புகளை அவர் பார்வையிட்டு போலீசாரிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.
தொடர்ந்து தேவைப்படும் சமயங்களில் குற்றவாளிகளை மேலும் விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டு குற்றவாளிகளை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்து உள்ளார். இதனால் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.