தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அருள் (வயது 50) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் அருளை கைது செய்து, அவரிடம் இருந்த ரூபாய் 3,10,400 மதிப்புள்ள 374 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த உதயகுமார் (வயது 62) என்பவரது பலசரக்கு கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே உதயகுமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ரூபாய் 5,150 மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 44 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.