அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

Tuticorin S.P.Announcement தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2023-11-11 05:43 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

Tuticorin S.P.Announcement 

தீபாவளி திருநாளில் பொதுமக்கள் அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே காலையில் 1 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும் பட்;டாசு வெடிக்க உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் பெற்றோர்கள் கண்காணிப்பில்தான் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க விடாமல், நீங்கள் அருகில் இருந்துகொண்டுதான் வெடிக்கவைக்க வேண்டும். பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய வாளி மற்றும் மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும். திறந்த வெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணிகள் அணிந்திருக்க வேண்டும்.

பாலியஸ்டர் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. ஏனெனில், அவை எளிதில் தீப்பற்றும் தன்மைகொண்டவை. பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடுவது, பட்டாசைப் பற்றவைத்து கையால் தூக்கிப்போடுவது போன்றவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்கள், கூரை வீடுகள் உள்ள இடங்கள், பட்டாசு விற்பனை கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்கள் அல்லது அதற்கு மிக அருகாமையில் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், அந்தப்பகுதிக்கு காவலர் அதிக அளவில் ரோந்து சென்று கவனிப்பார்கள். மேலும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகன வேகப்பந்தயம் வைத்து செல்லுதல் (Bike Race) பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி அதிக வேகத்தில் செல்வது, போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News