தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தில் பனைமர விதைகள் விதைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தில் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாத்து ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
நிலத்தடி நீரை மேம்படுத்தவும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும் கடற்கரை, தீவு பகுதிகளும், மண் அரிப்பை தடுக்கவும், கரைகளை வலுப்படுத்தவும், நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளற்றாங்கரை, வாய்க்கால் கரை பகுதிகளிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், ஓரங்களிலும், விரும்பி கேட்ட தனியார் இடங்களிலும் பனை மர விதைகளை விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது வரை சுமார் 74 லட்சம் பனை மர விதைகளை விதைத்து உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொது மக்களுக்கும் பனை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மாநாடு, கருத்தரங்கு, போன்ற பல்வேறு முகாம்களை நடத்தி பனையின் பயன்களையும், பனை பொருட்களின் மருத்துவ குணங்களையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வையும் மதர் சமூக சேவை நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டிற்கான பனை மர விதைகள் விதைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டம் உதயமான 37 ஆவது ஆண்டு துவக்க நாளில், புத்தன்தருவை தேரி பகுதியில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுதாகர், தென்மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டல செயலாளர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி கலந்து கொண்டு பனை மர விதைகள் நடும் பணியை துவக்கி பேசினார்.
முன்னதாக, மதர் இளம்பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெபா செல்வி அனைவரையும் வரவேற்றார், முடிவில் மதர் கற்பக தரு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜாக்குலின் நன்றி கூறினார். தூக்க நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பனைமர விதைகள் விதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.