தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு நவ. 10ம் தேதி ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு நவம்பர் 10 ஆம் தேதி ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-06 13:57 GMT

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தமிழகத்தில் காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்காக ஊர்க்காவல் படை என்ற அமைப்பில் உள்ளவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை காலங்கள், கோயில் விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவது உண்டு. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்படும் ஊர்க்காவல் படையினருக்கு உதவித் தொகையும் வழங்கப்படுவது உண்டு.

ஊர்க்காவல் படை வீரர்கள் பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட காவல் துறை மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தத் தேர்வில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 20 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எந்தவித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்வு நவம்பர் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News