தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ரூ 62 லட்சம் மோசடி: 3 பேர் கைது
தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 62 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்;
தூத்துக்குடி ஹார்பர் எஸ்டேட் பகுதியில் டீனோஸ் லோகநாதன் மற்றும் அவரது சகோதரரான அரிஸ்டோ லோகநாதன் ஆகியோர் ஆர்னி என்ஜினியரிங் டெக் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த தூத்துக்குடி ஸ்பிக்நகரை சேர்ந்த சிவசந்திரபோஸ் (37) என்பவரை முறைகேடு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு வேலையிருந்து டீனோஸ் லோகநாதன் நீக்கி உள்ளார்.
பின்னர் தங்கள் நிறுவனத்தில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (38) என்பவரை மனிதவள மேம்பாட்டு பிரிவு மேலாளராகவும், தூத்துக்குடி கிரேஸ் நகரை சேர்ந்த செல்வகுமார் (30) என்பவரை துணை மேலாளராகவும் பணியில் சேர்த்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அந்நிறுவன கணக்குகளை முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த தனியார் நிறுவனத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான நிறுவன கணக்குகளை ஆடிட்டர் தணிக்கை செய்தபோது, கணக்குகள் சரியான முறையில் பராமரிக்கபடவில்லை என தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சரிபார்த்தபோது, பணி நீக்கப்பட்ட சிவசந்திரபோஸ், பணியில் இருக்கும் பாக்கியராஜ் மற்றும் செல்வகுமார் ஆகியோருடன் சேர்ந்து 62 லட்சத்து 28 ஆயிரத்து 705 ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான டீனோஸ் லோகநாதன் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், நாகஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிவசந்திரபோஸ், செல்வகுமார், பாக்கியராஜ் ஆகிய மூவரும் கூட்டுசதி செய்து சட்டத்திற்குபுறம்பாக ஆதாயமடைய வேண்டும் என்ற எண்ணத்தில், கே.வி.எம் எண்டர்பிரைசஸ் மற்றும் வேதர்சனா என்ற நிறுவனங்களின் பேரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூபாய் 12,58,705 ரூபாய் பணத்தை டீனோஸ் லோகநாதன் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து அனுப்பியதும், பின்னர் விசாரித்தபோது அந்த பெயரில் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், மூவரும் சேர்ந்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 49,70,000 பணத்தை ஜே.எம் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றி அதில் இருந்து மேற்படி பணத்தை தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி மொத்தம் ரூபாய் 62,28,705/- பணத்தை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையெடுத்து, மோசடி தொடர்பாக சிவசந்திரபோஸ், பாக்கியராஜ் மற்றும் செல்வகுமார் ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.