சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்தில் நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்புகளை சுனாமி பேரலை ஏற்படுத்தியது. அந்த தீரா வடுக்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் அண்ணா சங்கு குளி மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி கடல் மாதா சாந்தி அடைய கடலில் மலர் தூவி பாலூற்றி வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீண்டு வர வேண்டியும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், மீனவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.