தூத்துக்குடி- பாலக்காடு இடையே ரயில் இயக்க நடவடிக்கை: மதுரை கோட்ட மேலாளர் தகவல்

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீன மயமாக்குவது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-11-18 14:22 GMT

தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீன மயமாக்குவது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ், தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளன. இதையொட்டி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டன.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும் அறை, சுகாதார வசதிகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்வது மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மதுரை கோட்ட பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வாய்ப்பு உள்ளது. பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி- பாலக்காடு இடையே பாலருவி லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து போன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீ விபத்துக்கள் ரயிலில் ஏற்படுவதை தடுக்க பயணிகள் ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகள், சிலிண்டர்கள் உள்ளிட்ட தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.

எனவே பயணிகள் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை ரயில் பெட்டிகளில் கொண்டு செல்லக்கூடாது. தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஷா தெரிவித்தார்.

Similar News