தூத்துக்குடி எஸ்.பி.இரவு ரவுண்ட்ஸ்: தேவையில்லாமல் திரிபவர்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீரென இரவு நேரத்தில் ரோந்து மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இரவு நேரத்தில் யாரும் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிய வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சைக்கிளில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டார். சில காவல் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டார்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று (22.04.2023) இரவு தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு திடீர் ரோந்து மேற்கொண்டார். அதன்படி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு, பழைய பேருந்து நிலையம் மற்றும் அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு போன்ற பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரோந்து சென்று அங்கு காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை நிறுத்தி விபரங்களை கேட்டு விசாரணை மேற்கொண்டார். அதிவேகமாக சென்ற வாகனங்கள், வெளியூரில் இருந்து வந்த நான்கு சக்கர வாகனங்களையும் அவர் நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு, தேவையில்லாமல் இரவு நேரங்களில் சுற்றி திரிய வேண்டாம் என்று அவர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின் போது தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழரசன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.