தூத்துக்குடியில் சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்..
தூத்துக்குடி சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மறியலில் ஈடுபட்ட சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள்.
கடலுக்கு அடியில் காணப்படும் சங்குகளை சேகரித்து அதை சுத்தம் செய்து விற்பனை செய்யும் தொழிலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பலர் படகுகளில் வந்து தூத்துக்குடி கடல் பகுதியில் சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட சங்கு குளி மீனவர்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியூரைச் சேர்ந்த சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபடுவோரை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கு குளி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம், 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 7 நாட்டுப் படகு உரிமையாளர்கள் சங்கு குளிப்பதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை அழைத்து வந்து தொழில் செய்து வருகின்றனராம்.
அதற்கு உள்ளூர் சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதற்கிடையே, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக, திரேஸ்புரம் கடற்கரை அருகே சங்கு குளி தொழிலாளர்களிடம் சங்கு குளி மீனவத் தொழிலாளர் சங்க செயலாளர் அலாவுதீன் இன்று பேசிக்கொண்டு இருந்தாராம்.
அப்போது அங்கு சென்ற வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் என்பவர் அலாவுதீனிடம் எதற்காக கூட்டம் கூட்டி உள்ளீர்கள் என்று கூறி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றாராம். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து, சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் திரண்டனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சங்கு குளி மீனவத் தொழிலாளர் சங்க செயலாளர் அலாவுதீனை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் திரேஸ்புரம் கடற்கரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மீனவர்களின் மறியல் போராட்டம் காரணமாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அலாவுதீனை போலீஸார் விடுவித்தனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். வெளி மாவட்ட மீனவர்களை வைத்து சங்கு குளித்தல் தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் படகு உரிமையாளர்களுக்கு போலீஸார் சிலர் ஆதரவாக செயல்பட்டு தங்களை மிரட்டி வருவதாகவும், வெளி மாவட்ட மீனவர்கள் வைத்து தூத்துக்குடியில் தொழில் செய்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் சங்கு குளி மீனவத் தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.