தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து 10 சென்ட் நிலம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

தூத்துக்குடியில் 10 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக கிரையம் செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-03-17 13:50 GMT

தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (58) என்பவர் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் ஒன்றாவது பகுதி (சர்வே எண் 250/2A-இல்) உள்ள 10 சென்ட் நிலத்தை கடந்த 28.08.2014 அன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். தற்போது இந்த நிலம் மேற்படி தர்மராஜ் என்பவரது அனுபவத்தில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், தூத்துக்குடி அண்ணாநகர் 8 ஆவது தெருவை சேர்ந்த வானமாமலை (65) மற்றும் தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் (61) ஆகிய இருவரும் சேர்ந்து, தர்மராஜ் சொத்தை அபகரிக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.


இதையெடுத்து, தர்மராஜின் 10 சென்ட் நிலத்தின் சர்வே எண்ணில் அந்தோணிராஜ் என்பவர் பெயர் இருப்பதை பயன்படுத்தி, கிறிஸ்துராஜ் என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள அந்தோணிராஜ் பெயரில் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக தயார் செய்து, அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்தி முக்கூடல் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண் 854/2021-இன் படி அந்த நிலத்தை வானமாமலை என்பவருக்கு மோசடியாக பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மோசடி செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் தர்மராஜ் புகார்அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணசங்கர், தலைமைக் காவலர் கோதண்டன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சித்திரைவேல் ஆகியோர் அடங்கிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சொத்தை மோசடி செய்த புகாரின் அடிப்படையில், வானமாமலை என்பவரை தூத்துக்குடி அண்ணாநகரில் வைத்தும், கிறிஸ்துராஜ் என்பவரை தாளமுத்துநகர் மாதாநகரில் வைத்தும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News