தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 1 கோடி மோசடி.. சென்னை தொழிலதிபர் கைது...
தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.;
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 56). இவரும், அவரது மனைவி வாசுகியும் சேர்ந்து சென்னையில் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் விநியோக நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 30.05.2018 தேதியிட்ட காசோலை மூலம் 40 லட்சம் ரூபாயும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் 20 லட்சம் ரூபாயும் என மொத்தம் 60 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.
அந்த கடனுக்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுப் பத்திரம் அசல் ஆகியவற்றை அடமானமாக கொடுத்து உள்ளனர். இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01.2020 தேதியிட்ட உறுதிமொழிப் பத்திரத்தையும் மீண்டும் அடமானமாக கொடுத்து உள்ளார்.
பின்னர், சிவசங்கர் நிதி நிறுவனத்தினரிம், தங்களால் கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றும், தாங்கள் அடமானம் வைத்த கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தை திருப்பித் தந்தால் அந்த காட்டேஜை விற்று பணத்தை தந்து விடுவதாக நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து அசல் ஆவணத்தை வாங்கியுள்ளார்.
அந்த ஆவணத்தைக் கொண்டு 20.01.2020 அன்று கொடைக்கானல் காட்டேஜை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார். ஆனால், நிதி நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்து, ஒரு கோடியே 8 லட்சத்து 61 ஆயிரத்து 20 ரூபாய்க்கு காசோலைகள் கொடுத்துள்ளார்.
இருப்பினும், அந்த காசோலையை பணமாக்க விடாமல், காசோலைகள் தொலைந்து விட்டது என அவரது வங்கிக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் (Stop Payment) என்று தெரிவித்து மோசடி செய்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நிதி நிறுவனத்தினரை கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார்.
இதுகுறித்து ராஜம் பைனான்ஸ் கம்பெனி மேலாளர் பிரபாகரன் என்பவர்; கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் தனி அலுவலாக ஏற்கெனவே சென்னை சென்றிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன் ஜோதி ஆகியோர் சிவசங்கருக்கு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி அழைப்பாணை சார்பு செய்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், சிவசங்கரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று பேரூரணி சிறையில் அடைத்தனர்.