50 பவுன் நகைகளுடன் தப்பி ஓட்டம்.. தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி கைதான கொள்ளையர்கள்...
திருநெல்வேலியில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியபோது விபத்தில் சிக்கியதால் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வி.எம். சத்திரம் ஜான்சிராணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர், தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடிந்து வீடு சென்ற ராமசாமி தனது குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டுக்கு சென்ற ஐந்து பேர் கொண்ட கொள்ளை கும்பல், ராமசாமி மற்றும் குழந்தைகளை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்து தப்பிச் சென்றது.
கொள்ளையடித்த 50 பவுன் நகைகளுடன் 5 பேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தூத்துக்குடி நோக்கி வேகமான சென்றுள்ளனர். புதுக்கோட்டை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது.
அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கொள்ளை கும்பல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளது. இதற்கிடையே, திருநெல்வேலியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தென்பாகம் காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் தப்பியோட முயன்றதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் தப்பியோட முயன்றவர்களை பிடித்து எதற்காக ஓட முயன்றனர் என விசாரித்துள்ளனர். போலீஸார் தங்களது பாணியில் மேற்கொண்ட விசாரணையில், திருநெல்வேலி வி.எம். சத்திரத்தில் ராமசாமி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது தாங்கள் தான் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதை உறுதி செய்த போலீஸார் தூத்துக்குடியை சேர்ந்த முத்து, கண்ணன், சில்வர் ஸ்டார், கிஷோர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இதில், படுகாயம் அடைந்த முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய சம்சுதீன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பிடிபட்ட கொள்ளை கும்பலிடம் இருந்து ராமசாமி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் நகைகள், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலியில் கொள்ளை அடித்து விட்டு விபத்தில் சிக்கிய கொள்ளை கும்பல் சில மணி நேரத்தில் தூத்துக்குடியில் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.