தூத்துக்குடியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு...

தூத்துக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2023-02-19 06:22 GMT

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி காந்திமதி. (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், தட்டாப்பாறை அருகே உள்ள கீழ செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நயினார் மனைவி காந்திமதி (வயது 75). கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நயினார் இறந்துவிட்டதால், காந்திமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் 13.02.2023 அன்று அதிகாலை காந்திமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளனர். அவர்களைக் கண்டதும் காந்திமதி கூச்சலிட்டதால் இருவரும் காந்திமதியை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர்.

மேலும், காந்திமதி தொடர்ந்து கூச்சலிட்டதால் அவரை கத்தியால் தாக்கி உள்ளனர். மேலும், பணம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர். காந்திமதியிடம் பணம் இல்லை என தெரிந்துக் கொண்ட இருவரும் அவரை மேலும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். மூதாட்டி காந்திமதியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக காந்திமதியின் மகன் ஆதிமூலப்பெருமாள் தட்டாப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தட்டாப்பாறை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தட்டாப்பாறை போலீஸார் மூதாட்டி காந்திமதியை தாக்கியதாக கீழ செக்காரக்குடி சேர்ந்த சங்கரநயினார் (22) மற்றும் நெல்லையப்பன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைதான சங்கரநயினார் மற்றும் நெல்லையப்பன் ஆகிய 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் கீழே தவறி விழுந்ததில், இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களுக்கு மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்க உதவி செய்தனர்.

மூதாட்டி உயிரிழப்பு:

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி காந்திமதி 6 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த தட்டாப்பாறை போலீஸார் தற்போது மூதாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சங்கரநயினார் மற்றும் நெல்லையப்பன் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பணத்திற்காக கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தட்டாப்பாறை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News