தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதானவர்களில் மூன்று பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சொந்தமாக நகை அடகு கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 22.02.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரம் பகுதியில் அரிவாளால் வெட்டி முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். போலீஸாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் தென்காசி மாவட்டம் கீழ கடையம் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் (வயது 29), தூத்துக்குடி ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (29), திருவள்ளூர் மாவட்டம் கம்மவார் பாளையம் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் (29) உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ராஜரத்தினம், வேல்முருகன் மற்றும் இலங்கேஸ்வரன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான தென்காசி மாவட்டம் கீழ கடையம் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம், தூத்துக்குடி ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கம்மவார் பாளையம் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
ஆட்சியரின் உத்தரவின் ராஜரத்தினம், வேல்முருகன், இலங்கேஸ்வரன் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், மூவரையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தார்.