வழக்கறிஞர் கொலை: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் முக்கிய முடிவு
தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.;
தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனது நகை அடகு கடை அருகே வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடக் கூடாது என வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை தொடர்பாக சில நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்றம் முன்பு பாளையங்கோட்டை சாலையில் நாளை (3.03.2023) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சங்க உறுப்பினர் முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் கூட்டம் 6.03.2023 அன்று காலை நீதிமன்றத்தில் வைத்து நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காலவறையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் வரும் 06.03.2023 தொடர்கிறது என்றும் 07.03.2023 செவ்வாய்கிழமை முதல் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லலாம் என்றும் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.