குற்றவியல் நடவடிக்கை தேவை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆட்சியரிடம் மனு..

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-12-12 12:35 GMT

தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்ததிய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அரசு உத்தரவிட்டது. பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்ட ஆணையம் சமீபத்தில் அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது.

ஆணையத்தின் பரிந்துரைபடி, காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தூத்துக்குடியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள், நீதி வேண்டும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையின் மீது கொலை வழக்கு பதிவு செய்து கூண்டில் ஏற்ற வேண்டும் என கோசங்கள் எழுப்பினர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இறந்தவர்களின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.

இதையெடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இறந்தவரின் குடும்பத்தினரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கூட்டமைப்பினர் அளித்தனர்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தில், காவல்துறையால் 13 பேர் சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக முதல்வர் கூறி இருந்தார்.

மேலும், தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தின் போது "துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்று முதல்வர் உறுதி அளித்தார். ஆனால் 17-10-22 அன்று அரசால் வெளியிடப்பட்ட G.O.No.SS 11/320-16/2022 அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின் பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் உண்டாக்கி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்ல வழக்குத்தடை நீக்கம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1,00,000 நிவாரணம் உட்பட பல்வேறு பொருத்தமான துயர்துடைக்கும் பணிகளை செவ்வனே செயல்படுத்தி உள்ளீர்கள்.

கொன்றவர்கள் மீதான குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீஸார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

எனவே, சட்டப் மன்றத்தில் முதல்வர் தெரிவித்ததுபோல, "தவறு செய்தோர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்ற உறுதிமொழியை அமல்படுத்த, அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து அரசாணையை திரும்பப் பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை ஆலையை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டும் என்றும் தங்களை மிகுந்த நம்பிக்கையோடு தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News