தூத்துக்குடியில் வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி வழக்கில் கைதான மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, புகையிலைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 20.02.2023 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் சாலை பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (வயது 34) என்பவரை சிலர் அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இந்த வழக்கில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த சாரதி (21), மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த மரிய யோஸ்வின் (21) மற்றும் காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி (26) ஆகியோரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீலார் கைது செய்தனர்.
வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட சாரதி, மரிய யோஸ்வின் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த சாரதி, மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த மரிய யோஸ்வின் மற்றும் காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், சாரதி, மரிய யோஸ்வின், திருமூர்த்தி ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், மூன்று பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.