அரசுக்கும், வேம்புக்கும் திருமணம்.. மழை வேண்டி நூதன வழிபாடு...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மழை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் வைபவம் நடைபெற்றது.
தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் மழை பெய்யாமல் போனாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மழை வேண்டி பல்வேறு வினோதமான முறையில் வழிபாடு நடைபெறும். கழுதைக்கும், மனிதனுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும் சில இடங்களில் இன்றளவும் கடைபிடிக்க்பட்டு வருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் அரசமரம் மற்றும் வேப்பமரம் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து உள்ளது. மழை வேண்டி அந்த இரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வசதி படைத்தவர்கள் வீட்டில் வெகு விமர்சையாக ஒரு திருமணம் நடைபெற்றால் எவ்வாறு இருக்குமோ அதையும் மிஞ்சும் அளவுக்கு, இந்த வினோதமான திருமண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவிற்காக கோயில் முன்பு அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருந்தது.
18 தாம்புலத்தில் பழ வகைகள், கற்கண்டு, சாக்லெட், பூ, பட்டு போன்ற பொருட்களுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். அதன்பின்னர் கோயிலில் உள்ள முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றது.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மரத்திற்கு முன்பு நாகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரம் மற்றும் நாகர் சிலைக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம் நடைபெறும் நிகழ்வாக மஞ்சளால் ஆன மாங்கல்யம் கட்டப்பட்டது. அப்போது பொதுமக்கள் ஒன்றுகூடி குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதன்பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் திருமண விழாவில் சாப்பாடு வழங்குவது போல் வடை பாயாசத்துடன் விருந்து வழங்கப்பட்டது. நூதன முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு சாத்தான்குளம் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.