தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2023-02-03 15:11 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தில் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எந காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 26.06.2022 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவியான முத்துமாரி (32) என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கைதான கருப்பசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 06.01.2023 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வல்லநாடு கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்ட ராமன் (24) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 13.01.2023 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழையகாயல் ராமச்சந்திராபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பழையகாயல் புல்லாவழி பகுதியைச் சேர்ந்த அதிபன் (25) என்பவரை ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 04.01.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கைதான வெங்கடேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த கருப்பசாமி, வல்லநாடு கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்ட ராமன், பழையகாயல் புல்லாவழி பகுதியைச் சேர்ந்த அதிபன் மற்றும் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

ஆட்சியர் செந்தில்ராஜின் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News