தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு...

தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-01-13 06:27 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபடுவோர், புகையிலை பொருட்கள், கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 25.12.2022 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ராம்குமார் (வய 44) மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் (39) ஆகியோரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த முருகேசன் (47) மற்றும் அவரது மகன் மகேஷ் (19) ஆகியோரை தென்பாகம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதேபோல, 30.11.2022 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா அருகில் வைத்து, தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பெரியநாயகம் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கைதான, தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பழனிக்குமார் (39), தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (28) ஆகியோரில், ஆனந்தராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 18.12.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த முனியாண்டி (42) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். முனியாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 29.12.2022 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு- கலியாவூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த முத்துகல்யாணி (21) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். கைதான முத்துகல்யாணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ், தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ், ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த முனியாண்டி மற்றும் முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த முத்துக்கல்யாணி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News