மீனவ கிராமங்களில் ஊர் கமிட்டியை சீர்குலைக்க முயற்சி.. போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்கம் அறிவிப்பு…
தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராமங்களில் செயல்படும் ஊர் கமிட்டியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாக அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அண்டன் கோமஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணைய அறிவிப்பாணை மற்றும் மீனவ கிராமங்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பானை தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருப்பதாகவும், அந்த வரைபடத்தில் ஏராளமான மீனவ கிராமங்களின் பெயர்கள் விடுபட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அறிவிப்பால் வருங்காலங்களில் மீனவ கிராமங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி தமிழக முழுவதும் அந்த அறிவிப்பாணைக்கு எதிராக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அண்டன் கோமஸ், தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முழுவதும் மீனவ கிராமங்களில் ஜனநாயக முறைப்படி ஊர் கமிட்டிகள் அமைக்கப்பட்டுளன. அந்த கமிட்டிகள் மூலம் மீனவ கிராமங்களில் நடைபெறும் பிரச்சினைகளுக்கும், கடலில் மீனவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு அதன் மூலம் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 400 ஆண்டுகளாக இந்த ஊர் கமிட்டியினர் மீனவர் கிராமங்களில் மீனவ மக்களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகம் செய்து வருகின்றனர். இதுவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உள்ளது. மீனவ ஊர் கமிட்டியில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அந்த ஊர் மக்களே நிர்வாகத்தை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால், தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களின் அரசியல் லாபத்துக்காக மீனவ கிராமங்களில் செயல்படும் ஊர் கமிட்டியை சீர்குலைக்கும் வகையிலும், தங்களுக்கு எதிராக செயல்படும் ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது காவல் காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு போட்டும் வருகின்றனர்.
இதற்கு மீனவர்கள் சார்பாக தமிழக அரசுக்கு அகில இந்திய மீனவர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், சென்னையில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் மீனவர்களை திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அண்டன் கோமஸ் தெரிவித்தார்.