ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2023-02-01 12:07 GMT

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65). ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (28). மாரியப்பன் மற்றும் ராஜேஸ்வரன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (34) மற்றும் அவரது சகோதரரிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த 1.02.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் மாரியப்பன் மற்றும் ராஜேஸ்வரின் வங்கி கணக்குகளிலும், ரொக்கப் பணமாகவும் 30 லட்சம் ரூபாய் பணத்தை முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் செலுத்தி உள்ளனர்.

அதன் பிறகு, முத்துக்கிருஷ்ணனையும், அவரது சகோதரரையும் மேற்கு வங்காளம் ஹவுராவிற்கு அழைத்துச் சென்று, மெடிக்கல் செக்அப் மற்றும் போலி சான்றிதழ் வாங்கி கொடுத்தும் ரயில்வே பணிக்கு பயிற்சி என கூறி கொல்கத்தா, டெல்லி என அலைக்கழித்தும் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்து உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு மாரியப்பன் மற்றும் ராஜேஸ்வரனை கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இதுபோன்று பல நபர்களிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News