வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி.. தூத்துக்குடியில் ஒருவர் கைது...
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்பாஸ் (வயது 36). இவர், கடந்த 27.012022 அன்று தூத்துக்குடியில் வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்றும், அதில் அபுதாபியில் உள்ள அபுதாபி கேஸ்கோ என்ற கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார்.
அந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு தூத்துக்குடி டேவிஸ்புரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த காமராஜ் (42) மற்றும் சிலர் தொடர்பு கொண்டு உள்ளனர். அவர்களிடம், வெளிநாடு செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்தான் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று முகமது அப்பாஸ் கூறி உள்ளார்.
மேலும், மருத்துவமனையில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு நபருக்கு ரூ. 7,500 வீதம் 16 பேருக்கு ரூ. 1,20,000-ம், அதேபோல் தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த 8 நபர்களிடம் தலா ரூ. 20,000 வீதம் ரூ. 1,60,000- ம், ஆக மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முகமது அப்பாஸ் பெற்றுள்ளார்.
மேலும், காமராஜ் உட்பட சிலரிடம் போலியான உறுதிப்படுத்தும் கடிதம் (Confirmation Letter) கொடுத்து விரைவில் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த 21.06.2022 அன்று காமராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ் மேற்பார்வையில், குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார் மற்றும் தலைமை காவலர் செந்தில்வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், முகமது அப்பாஸை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இதேபோன்று பல்வேறு இடங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் பணம் வசூல் செய்து 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.