தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகை

விதிமுறைகளை மீறும் தனியார் காற்றாலை நிறுவனங்களை கண்டித்து பா.ஜ.க.வினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;

Update: 2023-08-28 15:57 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கழுகுமலை, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காற்றாலை நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் சில காற்றாலை நிறுவனங்கள் விதிமுறைகளை மீறுவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுவது உண்டு.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் முறைகேடாக கிராமத்தில் குளத்திற்கு செல்லும் ஓடைகள் வாய்க்கால் ஆகியவற்றை ஆக்கிரமித்து பாதை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அந்த பகுதியை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் தலைமையில் அங்கிருந்த ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

ஆனால் மீண்டும் இரவோடு இரவாக தனியார் காற்றாலை நிறுவனங்கள் மீண்டும் ஓடையை ஆக்கிரமித்து பாதை அமைத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தி.மு.க. பிரமுகர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், விதிமுறைகளை மீறி ஓடை மற்றும் வாய்க்காலை மூடி பாதை அமைக்கும் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News