தூத்துக்குடியில் 1500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்.. ஆட்சியர் நடவடிக்கை...
தூத்துக்குடியில் நடைபெற்ற திடீர் சோதனையின்போது 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு சரியான முறையில் ஆவின் பால் கிடைக்காத நிலை தொடர்ந்தது. இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் பாலில் கலப்படம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், அவ்வாறு பாலில் கலப்படம் செய்தது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை பேருந்து மற்றும் வாகனங்கள் மூலம் கேன்களில் விற்பனைக்காக கொண்டுவரப்படும் பசும் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலந்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பால்வளத் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாநகராட்சி ,காவல்துறை அதிகாரிகள் இணைந்து திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பாலை சோதனை செய்ததில் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுமார் 1500 லிட்டர் பாலை உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாலில் கலப்படம் செய்வது, தண்ணீர் கலப்பது குற்றம். பாலில் கலப்படம் செய்வதற்காக பவுடர் உள்ளிட்டவற்றை கலப்பது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், கலப்படம் இல்லாத பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்புத்துறை, பால் வளத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல் துறை, மாநகராட்சி இணைந்து மாநகராட்சி பகுதியில் கலப்படம் இல்லாத பால் மக்களுக்கு கிடைப்பதற்காகவும், கலப்படம் செய்யப்பட்ட பாலை பறிமுதல் செய்வதற்காகவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் மருத்துவமனை பகுதிகளில் பாலின் தரம் குறித்து கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்து 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல அளவீடு கருவிகளும் முறையாக இல்லை.
500 மில்லி லிட்டர் என்றால் 450 மில்லிலிட்டர் தான் பால் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.