ஆத்தூர் பேரூராட்சியில் ரூ. 5.40 லட்சம் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் திமுக கவுன்சிலர்கள் புகார்…
திமுகவைச் சேர்ந்த ஆத்தூர் பேரூராட்சி தலைவர் முறைகேடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் திமுக கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சியின் துணைத் தலைவரான மகேஸ்வரி முருகப்பெருமாள் தலைமையில், திமுக மற்றும் காங்கிரஸ், சுயேச்சை கவுன்சிலர்கள் 6 பேர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ஆத்தூர் பேரூராட்சி தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த கமாலுதீன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி தலைவராக இருப்பவர் கமாலுதீன். இவர், திமுக சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார் . கமாலுதீன் ஆத்தூர் பேரூராட்சியில் தெரு விளக்குகளை சீரமைக்க ரூபாய் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மின்சார உதிரிபாகங்கள் வாங்கியதாக செலவின கணக்கை ஆத்தூர் பேரூராட்சி கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தார்.
ஆனால், பேரூராட்சி தலைவர் உதிரி பாகங்கள் வாங்காமலே வாங்கியதாக முறைகேட்டில் ஈடுபட்டு கணக்கு தாக்கல் செய்ததாக கூறி திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், அசோக்குமார், வசந்தி முருகேசன், கமலா, செல்வி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் பாலசிங், சுயேச்சை கவுன்சிலர் சிவா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் முருகனிடம் புகார் அளித்தோம். ஆனால், முருகன் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. செயலர் அலுவலர் முருகனும், பேரூராட்சி தலைவர் கமாலுதீனும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.