பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த கோவை இளைஞர் கைது

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2023-02-04 12:42 GMT

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து மோசடி செய்த கருணாகரனை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வவ்வாதோத்தி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (48). இவரது பேஸ்புக் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர் அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி Protonforex.com என்ற இணையத்தில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 740 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து ராமர் மோசடி செய்யப்பட்ட விவரம் அவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் National Cyber crime Reporting Portal மூலம் புகார் பதிவு செய்துள்ளார்.


ராமர் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் உட்பட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராமரிடம் மோசடி செய்தது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (32) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று கருணாகரன் வீட்டு முன்பு வைத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம், ஒரு ஸ்கோடா கார், ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதான கருணாகரன் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட கருணாகரனின் வங்கி கணக்கில் இருந்த 9 லட்சத்து 98 ஆயிரத்து 865 ரூபாயும் முடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News