தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து மணி மண்டபம்: மீனவ மக்கள் கட்சி புதிய கோரிக்கை
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து. இவர், தூத்துக்குடி மாநகரத்திற்கு தாமிரபரணி ஆற்றில் வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வந்தவர் ஆவார். ஐந்து முறை நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் தனது சொத்துக்களில் பாதியை தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக அளித்தவர். இவருக்கு மணிமண்டபம் அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது தி.மு.க. அரசால் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மணிமண்டபம் வழக்கமாக மற்ற தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அமைக்கப்படும் மணிமண்டபம் போல் இல்லாமல் கூண்டுக்குள் அவரது சிலையை வைத்தது போன்று ஒரு சிலையை மட்டும் வைத்துள்ளனர் என மீனவர்கள் அமைப்புகள் பல குற்றம்சாட்டி உள்ளன.
இதுகுறித்து தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் அலங்காரபரதர் கூறியதாவது:-
மணிமண்டபம் என்றால் குரூஸ் பர்னாந்தின் வாழ்க்கை வரலாறு அவர் தூத்துக்குடி மாநகர வளர்ச்சிக்காக செய்த சாதனைகள் தொண்டுகள் ஆகிவை குறித்து இடம்பெற வேண்டும். மேலும், எப்பொழுதும் அவரது புகழை பொதுமக்கள் வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும்படி அமைக்க வேண்டும்.
ஆனால் அதை தமிழக அரசு மறைக்கும் வண்ணம் தற்போது குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை உருவாக்கி உள்ளது/ எனவே, இந்த மணிமண்டபத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இல்லை என்றால் வரக்கூடிய தேர்தல் காலங்களில் மீனவ மக்கள் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அக்டோபர் 13 ஆம் தேதி இந்த குரூஸ் பர்னாந்து மணிமண்டப திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது மறுதேதி அறிவிக்கப்படாமல் ஒத்திக்க வைக்கப்பட்டுள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.