சிறுதானிய தூதுவர்களாக மாணவர்கள் செயல்பட தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்

கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டார்.

Update: 2023-11-30 13:22 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட வழங்கல் துறை சார்பில், புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், சிறுதானியங்கள் தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அவர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:

சங்க கால இலக்கியத்தில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். சங்க கால மக்களைவிட தற்போது உள்ள மக்களுக்கு சிறுதானியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நமது ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் நமக்கு காய்ச்சல் போன்ற சிறிய நோய்கள் வந்தால்தான் தெரியும்.

தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் மூலம் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. தொற்று நோய்களுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் தொற்றா நோய்களை நமது வாழ்க்கை முறைகள், உணவு பழக்கவழக்கங்கள் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும்.


இன்றைய இளையதலைமுறையினர் நிறைய பேருக்கு துரித உணவுகள் மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது. இளைஞர்களின் திறன் குறையும்போது பொருளாதார வளர்ச்சியும் குறையும். எனவே சத்தான பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உலக அளவில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளிடமும் சிறுதானிய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு தூதுவர்களாக செயல்பட்டு அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுதானிய உற்பத்தி, தேவை, சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டார். நிகழ்ச்சியில்; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News