தண்ணீரில் அதிக நேரம் மிதந்து உலக சாதனை படைத்த தூத்துக்குடி சிறுவன்

தூத்துக்குடியில் 9 வயது சிறுவன் தொடர்ந்து நீச்சல் குளத்தில் 7 மணி நேரம் முப்பது நிமிடங்கள் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்தார்.

Update: 2023-06-12 14:29 GMT

நீச்சல் குளத்தில் அதிக நேரம் மிதந்து சாதனை படைத்த தூத்துக்குடி சிறுவன்.

தூத்துக்குடியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஹர்சன் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்றுள்ள இவர், நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீச்சல் குளத்தில் அதிக நேரம் மிதப்பதற்கான உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில் நீச்சல் குளத்தில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. மாணவன் ஹர்சன் காலை 10 மணி முதல் தொடர்ந்து  மிதப்பதற்கான உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.


மாணவர் ஹர்சன் தொடர்ந்து நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தொடர்ந்து மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவன சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சாதனை முடித்து வெளியே வந்த சிறுவனை பெற்றோர் பயிற்சியாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.


இதைத் தொடர்ந்து சாதனை படைத்த சிறுவன் ஹர்சனை பாராட்டி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதுவரை தொடர்ந்து 6 மணி நேரம் தண்ணீரில் மிதப்பது சாதனையாக இருந்த நிலையில், தற்போது மாணவர் ஹர்சன் 7 மணி நேரம் 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்துள்ளதாகவும், மாணவர்களிடையே நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனையை மாணவர் ஹர்சன் நிகழ்ச்சி உள்ளதாகவும் அவரது பயிற்சியாளர் புஷ்பராஜ் தெரிவித்தார்.

நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த தூத்துக்குடி சிறுவன் ஹர்சனுக்கு பல்வேறு அமைப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News